செங்கல்பட்டு :செங்கல்பட்டு அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 3 மாணவர்கள் விபத்தில் பலியாகினர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் விமல்ராஜ் (16), செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளான். அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரபாகரன் (16), திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளான். அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் நிஷாந்த் (14), செங்கல்பட்டு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளான். நேற்றிரவு தென்னேரி சென்றுவிட்டு ஒரே பைக்கில் மூன்று பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். திருப்போரூர்,செங்கல்பட்டு சாலை ஆந்திரேயபுரம் அருகே வந்தபோது பைக் மீது, மினி வேன் மோதியது. விமல்ராஜ், பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிஷாந்த் இறந்தான். செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து வேன் டிரைவரான நீலாங்கரையை சேர்ந்த ஐயப்பனை (36) கைது செய்து விசாரிக்கின்றனர். இறந்த 3 பேரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கிராம மக்கள் அனைவரும் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலங்கள், அவர்களது உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலையில் இறுதி சடங்கு நடக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook