நித்யானந்தாவை நீக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கை அனைத்து ஆதீனங்கள் அறிவிப்பு
மயிலாடுதுறை :மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததை 10 நாட்களுக்குள் வாபஸ் பெறாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து ஆதீனங்களும் எச்சரித்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை தருமை ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் தலைமையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவாவடுதுறை, சூரியனார்கோயில், திருப்பனந்தாள் காசிமடம், காமாட்சிபுரி, துலாஊர் ஆதீனம், செங்கோல் ஆதீனம், சிதம்பரம் மவுன ஆதீனம், ஊரனடி சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சைவ சமய மரபு முறை, நியதி ஆதீன சம்பிரதாயங்களை புறந்தள்ளி விட்டு கர்நாடக மாநிலத்தில் வசிப்பவரும், சைவ சமய நெறிகளை உணராதவரும், குற்ற பின்னணி உடையவருமான நித்யானந்தாவை 293வது பட்டத்திற்கு உரியவராக மதுரை ஆதீனம் அறிவித்திருப்பது அறம் அல்லாத செயல் என கருதுகிறோம். நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் அடுத்த பட்டத்திற்கு உரியவர் என ஆதீன கர்த்தர் அறிவித்துள்ளதை இன்னும் 10 நாளில் வாபஸ் பெற வேண்டும். இதை ஏற்காவிட்டால் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.