காபூல் :அல்கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அவர் பயணத்தை முடித்து சென்றதும் தலைநகர் காபூலில் குண்டுகள் வெடித்து 6 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல்கய்தா தீவிரவாதி இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த ஆண்டு மே 2,ம் தேதி அமெரிக்க சிறப்பு படையினர் ரகசிய தாக்குதல் நடத்தி கொன்றனர். அவர் கொல்லப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று நள்ளிரவு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்தார். அங்கு அதிபர் கர்சாய் மற்றும் அமெரிக்க படையினரை சந்தித்தார். பக்ராம் விமான தளத்தில் நேட்டோ வீரர்கள் மத்தியில் பேசிய ஒபாமா, ஆப்கனில் தலிபான் செயல்பாடுகளை அமெரிக்கா தகர்த்துள்ளது.
அல்கய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் 20 பேர் வரை அழிக்கப்பட்டுள்ளனர். ஆப்கன் பாதுகாப்பு படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என இலக்கு கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது. 2014ல் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு ஆப்கன் வீரர்கள்தான் பொறுப்பு. சர்வதேச படைகள் அவர்களுக்கு பயிற்சி மற்றும் அறிவுரைகள் வழங்கும். தேவைப்படும்போது அவர்கள் பக்கம் இருந்து போராடும் என்றார். இந்த திடீர் பயணத்தை முடித்துக் கொண்டு ஒபாமா கிளம்பியதும், தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் 3 இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடும் நடத்தினர். தலிபான் இயக்கம் இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல்களில் 6 பேர் பலியானதாக ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆப்கனில் உள்ள அமெரிக்க தூதரகம் உஷார்படுத்தப்பட்டது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook