நகை, பணத்தை தராவிட்டால் சுடுவேன் : வங்கி அதிகாரியை மிரட்டியவருக்கு வலை
கிருஷ்ணகிரி: நகை, பணத்தை தராவிட்டால், துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடிதத்தை காட்டி அதிகாரியை மிரட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகேயுள்ள பெரியமுத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதன் செயலாளர் நாகராஜ் (47). சுற்று பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். மேலும் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.
நேற்று மாலை 6 மணியளவில் நாகராஜ் மற்றும் ஊழியர்கள் 5 பேர் வங்கியில் இருந்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் வங்கிக்குள் நுழைந்தார். கையில் ஒரு பேக் வைத்திருந்தார். செயலாளர் நாகராஜிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அந்த வாலிபரின் நடவடிக்கைகள் வாய் பேசமுடியாதவர் போல் இருந்துள்ளது. கடிதத்தை படித்து பார்த்த நாகராஜ் அதிர்ச்சியடைந்தார். ‘ஐயா, வங்கியில் கொள்ளையடிக்க வந்துள்ளேன். லாக்கரில் உள்ள பணம், நகை அனைத்தையும் நான் கொண்டு வந்துள்ள பையில் சத்தமில்லாமல் வைத்து விடுங்கள். கைத்துப்பாக்கி வைத்துள்ளேன். பணம், நகை தராமல் மறுத்தால் சுட்டுக் கொன்று விடுவேன்’ என எழுதப்பட்டு இருந்தது.
அப்போது வங்கி ஊழியரான சரவணன், வெளியே சென்று விட்டு வங்கிக்குள் நுழைந்தார். இதைப்பார்த்த மர்ம ஆசாமி, தன்னை பிடிக்கத்தான் வருகிறார் என நினைத்து அங்கிருந்து தப்பி ஓடினார். மற்ற ஊழியர்களுக்கு வாலிபர் கொள்ளையடிக்க வந்தார் என்பது அப்போதுதான் தெரிந்தது. அவர்கள் வெளியே வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் அந்த ஆசாமி ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசில் நாகராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.