ஆந்திராவில் இருந்து கடத்திய 2 டன் செம்மர கட்டை பறிமுதல்
திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செம்மர கட்டைகள் கடத்துவதாக எஸ்பி விஜயகுமாருக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் இன்று அதிகாலை திருத்தணி அருகே பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த லாரியை போலீசார் நிறுத்தினர். டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். போலீசார் லாரியில் சோதனை செய்த போது அதில் 2 டன் செம்மர கட்டைகள் இருந்தன. இது சென்னைக்கு கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்த லாரி மற்றும் செம்மர கட்டைகளை திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.