ஆவடி: ஆவடி பூம்பொழில் நகர் சாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் பழனி (45), கட்டிட தொழிலாளி. மனைவி ஜெயந்தி (38). கடந்த 21,ம் பழனி வேலைக்கு சென்றிருந்தார். அப்போது ஜெயந்தியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், பழனி விபத்தில் அடிபட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறினார். அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, ஆவடி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கிருந்த 2 வாலிபர்கள், ‘பழனியை மேல் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். எங்களுடன் காரில் வாருங்கள்’ என்று கூறி ஜெயந்தியை அழைத்து சென்றனர். தாமரைபாக்கத்துக்கு அழைத்து சென்ற இருவரும், திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, நாலரை பவுன் செயினை பறித்துள்ளனர். பின்னர் அதே காரில் ஜெயந்தியை அழைத்து வந்து திருநின்றவூர் பாக்கம் செக்போஸ்ட் அருகே கீழே தள்ளிவிட்டு தப்பிவிட்டனர். இது குறித்து திருநின்றவூர் போலீசில் ஜெயந்தி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சத்தியன், எஸ்.ஐ. ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். ஜெயந்தியை கடத்தி நகை பறித்தது திருநின்றவூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த அருள் (22), கன்னடபாளையத்தை சேர்ந்த வினோத் (23) என்பதும் இருவரும் ஆட்டோ டிரைவர்கள் என்றும் தெரிந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook