கடையம் அருகே பயங்கரம் : லாரி டிரைவர் அடித்து கொலை
கடையம்: கடையம் அருகே லாரி டிரைவரை கல்லால் அடித்து கொலை செய்தது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அடுத்த கீழபுத்தநேரியை சேர்ந்தவர் மாரியப்பன் (35), லாரி டிரைவர். அதே ஊரை சேர்ந்தவர் மற்றொரு மாரியப்பன் (35), அவரது தம்பி பரம்படியான் (32), முருகன் (40) ஆகிய 4 பேரும் நேற்று நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தனர்.
அப்போது லாரி டிரைவர் மாரியப்பனுக்கும் முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. டிரைவரை மற்றொரு மாரியப்பனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டார். ரவணசமுத்திரம் ரயில்வே கேட் அருகே வந்தபோது பைக்கில் வந்த பரம்படியானும், முருகனும் ஆட்டோவை வழிமறித்து டிரைவர் மாரியப்பனை கல்லால் அடித்து கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதைப் பார்த்த மற்றொரு மாரியப்பன் தலைமறைவானார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மாரியப்பனுக்கும், முருகன் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இருவரும் சில வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். தனது மனைவி பிரிவுக்கு காரணமான மாரியப்பனை தீர்த்துக்கட்ட முருகன் திட்டம் தீட்டினார். அதன்படி, நேற்று கடையம் வந்த மாரியப்பனை முருகன் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள முருகன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.