பாகிஸ்தானில் பரபரப்பு : தலிபான்களை கிண்டல் செய்த நகைச்சுவை நடிகர் கடத்தல்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்த நகைச்சுவை நடிகர் கடத்தப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த நகைச்சுவை நடிகர் நிசார் கான். இவர் நகைச்சுவை பாடல் எழுதுவதிலும் வல்லவர். தலிபான் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்தார். தலிபான் தீவிரவாதிகள், திருடர்களை கண்டுபிடித்து எப்படி தண்டனை வழங்குகிறார் என்பது குறித்து சமீபத்தில் ஒரு பாடல் எழுதியிருந்தார். என் தலையை மொட்டை அடியுங்கள், என் முகத்தில் கறுப்பு மை பூசுங்கள், கழுதை மீது என்னை உட்கார வையுங்கள், என்னை கிண்டல் செய்யுங்கள் என்ற ரீதியில் அந்த பாடல் அமைந்துள்ளது.
இந்நிலையில், பெஷாவர் புறநகரில் உள்ள மடானி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற நிசார் கான், அங்கிருந்த விருந்தினர்கள் முன் தனது பாடலை பாடி தலிபான்களை கிண்டல் செய்து கொண்டிருந்தார். அப்போது 20 தீவிரவாதிகள் திடீரென உள்ளே புகுந்து, நிசார் கானை கடத்தி சென்றனர். திருமண நிகழ்ச்சியில் வேறு எந்த தாக்குதலும் நடத்தவில்லை. நிசார் கானை ஒன்றும் செய்ய மாட்டோம், பயப்படாதீர்கள் என்று கூறிவிட்டு தலிபான்கள் சென்றுள்ளனர். கடந்த ஆண்டும் நிசார் கானை தீவிரவாதிகள் கடத்தி ஒரு வாரத்துக்கு பின் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.