நீதிமன்றம் புறக்கணிப்பதை வக்கீல்கள் கைவிடவேண்டும் : சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் பேச்சு
பவானி :ஈரோடு மாவட்டம், பவானியில் ரூ.5.27 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு திறப்பு விழா நேற்று நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் தலைமை தாங்கினார். சட்ட அமைச்சர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் திறந்து வைத்து பேசியதாவது: வக்கீல்கள் அடிக்கடி நீதிமன்றங்களை புறக்கணிப்பதைகைவிட வேண்டும். இதற்கு மாற்றாக தங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனுவாகக் கொடுக்க வேண்டும். பின்னர் 4 மாதங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேட்டு பொதுநல வழக்குத் தொடரலாம். உச்சநீதிமன்றத்தில் 57 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளது. இதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தடுக்க போலீசார், வக்கீல்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். வழக்குகளை விரைவில் முடித்தால் மட்டுமே நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இவ்வாறு நீதிபதி சதாசிவம் பேசினார்.