கேளம்பாக்கம் அருகே அதிகாலை தனியார் கம்பெனி குடோனில் பயங¢கர தீ
திருக்கழுக்குன்றம் :கேளம்பாக்கம் அருகே தனியார் கம்பெனி குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கேளம்பாக்கம் அடுத்த தையூர் கோமான் நகரில் தனியார் கம்பெனி குடோன் உள்ளது. இங்கு பல்வேறு இடங்களில் தயாராகும் ஊறுகாய், சிகைக்காய், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கப்படும். அதை கம்பெனி குடோனில் பாதுகாத்து, தனியாக பேக்கிங் செய்து சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இந்த கம்பெனியில் 250 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். நேற்று மாலை பணி முடிந்ததும் ஊழியர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென்று கம்பெனியில் இருந்து கரும்புகை வர ஆரம்பித்தது.
இதை பார்த்ததும் அப்பகுதியினர் கேளம்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வண்டி விரைந்து வந்தது. வீரர்கள் கம்பெனி குடோனின் கதவை உடைத்து தீயை அணைக்க தொடங்கினர். ஆனால் தீயின் வேகம் அதிகரித்தது. இதை தொடர்ந்து செங்கல்பட்டு, நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 8 தீயணைப்பு வண்டிகள் வந்தது. பல மணி நேரம் போராடி இன்று காலை, வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என்று கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கிறார்கள்.