ரேஷன் கடைகளில் 4000 சேல்ஸ்மேன் பணியிடம் காலி
சேலம் : தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. 1.97 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 345 பகுதி நேர ரேஷன் கடைகள், 1143 முழு நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 1488 கடைகள் உள்ளன. 9.57 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. பகுதிநேர கடைகளுக்கு, ரேஷன் சேல்ஸ்மேன்கள் சென்று விடும் நேரங்களில், அவர் பணியாற்றி வரும் முழுநேர கடைகளுக்கு வரும் கார்டுதாரர்கள் விற்பனையாளர் இல்லாததால் ஏமாற்றம் அடைகின்றனர். இதற்கிடையே, மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் சேஸ்ல்மேன் பணியிடம் காலியாக உள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் 160 சேல்ஸ்மேன் பணியிடங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், அரிசி, மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படும் நாட்களில் அலைமோதும் கூட்டத்தால் சேல்ஸ்மேன்கள் அவஸ்தைப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து ரேஷன் சேல்ஸ்மேன்கள் கூறியது: ரேஷன் கடைகளில் எடையாளர் (பேக்கர்) பணியிடம் ஒதுக்கப்படாததால் அதிக கார்டுகள் உள்ள கடைகளில் சேல்ஸ்மேன் ஒருவரே உணவுப்பொருட்களுக்கான பில் போட்டுவிட்டு, பொருட்களை அளந்து போடும் பணியையும் செய்ய வேண்டிய நெருக்கடி உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலிப்பணியிடங்களால்சேல்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.