சென்னை : இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து சென்னை புறநகரில் வெளிமாநில மாணவர்களின் கணக்கெடுப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை புறநகரான சேலையூரில் சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து, ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கர தீவிரவாதியும், பீகாரைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவரும் சிக்கினர். அவர்கள் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில்தான், பெருங்குடி மற்றும் கீழ்கட்டளையில் உள்ள இரண்டு வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை நடந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்தக் கும்பல் வேளச்சேரியில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு போலீசாருக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொள்ளையர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பீகார், ஜார்க்கண்ட், டெல்லி உள்பட பல மாநிலங்களில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 6 துப்பாக்கிகள், குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும், இன்ஜினியரிங் கல்லூரியில் படிப்பதாகத்தான் வீட்டு உரிமையாளரிடம் சொல்லியிருந்தனர்.தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் தங்கியிருந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் பிரதோஷ் பாண்டே, சேகர் ஆனந்த் ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ள மாணவர்கள் யார்? அவர்கள் எங்கு தங்கியுள்ளனர் என்ற விவரங்களை கல்லூரிகளுக்கு சென்று போலீசார் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்த பட்டியல் தயாரானதும் அவை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் அடிப்படையில் வெளிமாநில மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதுவரை வெளிமாநில மாணவர்கள் தங்கியுள்ள இடங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் சந்தேக நபர்கள், சந்தேக மாணவர்கள் பற்றிய தகவல்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook