சாலையோரம் நடத்தப்படும் போராட்டங்கள் சட்டவிரோதம் கேரள ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
கொச்சி : சாலையோரங்களில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தர்ணாக்கள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை என கேரள ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு கொண்டு வந்த சட்டத்தில் சில அம்சங்கள் செல்லாது எனவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.கேரளாவில் சாலையோரங்களில் பொதுக்கூட்டங்கள், பேரணி, தர்ணா நடத்த 2010ம் ஆண்டு அந்த மாநில ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக அப்போது ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு, கடந்த ஆண்டு பொது சாலைகள் சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி சாலையோரங்களில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், அரசு விழாக்கள், திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை தலைமை நீதிபதி ராமச்சந்திரன் நாயர், நீதிபதி பி.எஸ்.கோபிநாதன் ஆகியோரை கொண்ட முதல் பெஞ்ச் விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. சாலையோரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் கேரள அரசு கொண்டுவந்த சட்டத்தில் இது தொடர்பான அம்சம் செல்லாது எனவும், அதே நேரத்தில் அரசு விழா மற்றும் திருவிழா தொடர்பான அம்சங்கள் செல்லும் எனவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.