சென்னை : மந்தைவெளியில் வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பாமக மாஜி கவுன்சிலர், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மயிலாப்பூர் பிள்ளையார் கோயில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நிஜாமுதீன். மனைவி அலியா. இவர்களுக்கு 3 மகன்கள். இரண்டாவது மகன் பிலால் (26), டெய்லர். கடந்த 14ம் தேதி இரவு, வீட்டருகே நண்பர்களுடன் பிலால் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வேனில் வந்த 5 பேர், திடீரென பிலாலை கடத்திச் சென்று, கொலை செய்தனர். இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் புகழேந்தி, உதவி கமிஷனர் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் பிணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாமக முன்னாள் கவுன்சிலர் மணிவண்ணனின் மகளை காதலித்ததால் பிலால் கொல்லப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவான மணிவண்ணனை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சென்னையில் பதுங்கியிருந்த மணிவண்ணனை நேற்றிரவு கைது செய்தனர். போலீசில் மணிவண்ணன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: என் மகளை பிலால் காதலிப்பதாக ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டார். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தேன். பிலாலின் அண்ணன் அகமது பாட்சாவை விசாரணைக்கு போலீசார் அழைத்திருந்தனர். அப்போது மயிலாப்பூர் ஸ்டேஷனில் போலீஸ்காரர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்த கத்தியை எடுத்து அகமதுவை குத்தினேன். போலீசார் என்னை கைது செய்தனர். ஒரு மாதத்துக்கு முன்னர்தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தேன்.போலீசார் பிலாலை பிடித்து சமரசம் பேசினர். மகளை என்னுடைய உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். சில நாட்களாக மீண்டும் பிலால் என் பெண்ணை தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார். இருவரும் நள்ளிரவு வரை மணிக்கணக்காக பேசினர். அடிக்கடி வெளியிலும் சந்தித்து வந்தனர். இது எனக்குத் தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்துதான் கூலிப்படையை வைத்து பிலாலை கொலை செய்தேன்.இவ்வாறு வாக்குமூலத்தில் மணிவண்ணன் கூறியுள்ளார்.கூலிப்படையை சேர்ந்தவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை யினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook