எம்பி பதவிக்கு மனு தாக்கல் டெல்லி விரைந்தார் சிரஞ்சீவி
சித்தூர் : தெலுங்கு திரைப்பட உலகின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி ஆந்திர அரசியலில் அதிரடியாக குதித்தார். பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அவரது கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்தனர். ஒரு நாடாளுமன்ற தொகுதியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் காங்கிரசை விட்டு ஜெகன் விலகியதை தொடர்ந்து சிரஞ்சீவி தனது கட்சியை கலைத்துவிட்டு காங்கிரசுடன் ஐக்கியமானார். இதனால் ஆந்திராவில் காங்கிரசின் பலம் கூடியது.
ஜெகன் விலகியபோது தக்க நேரத்தில் ஆதரவுக்கரம் நீட்டிய சிரஞ்சீவிக்கும், அவரது எம்எல்ஏக்களுக்கும் நன்றிக்கடன் செலுத்த காங்கிரஸ் முடிவு செய்தது. அதன்படி சமீபத்தில் ஆந்திர சட்டப்பேரவையில் 2 அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து சிரஞ்சீவிக்கு கட்சி மேலிடம் ராஜ்யசபா எம்பி வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக மனு தாக்கல் செய்ய சிரஞ்சீவி இன்று காலை ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
திருப்பதிக்கு இடைத்தேர்தல்
கடந்த 2009 தேர்தலில் திருப்பதி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிரஞ்சீவி, ராஜ்யசபா எம்பியாக உள்ளதால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
இதனால் திருப்பதி தொகுதிக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 1983ம் ஆண்டு அரசியலில் நுழைந்த நடிகர் என்.டி.ராமாராவ், திருப்பதி மற்றும் குடிவாடா ஆகிய இரு தொகுதிகளில் எம்எல்ஏவாக போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றதையடுத்து திருப்பதி தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் அப்போது இடைத்தேர்தல் நடந்தது.