சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இந்த தேர்தலில் ஜவகர் சூரியகுமார் (திமுக), முத்துச்செல்வி (அதிமுக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), முத்துக்குமார் (தேமுதிக), முருகன் (பா.ஜ.) உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தொகுதி முழுவதும் 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வைத்திருந்த அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், சில இடங்களில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது.
இடைத்தேர்தலில் 77.52 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆண்கள் 75.08 சதவீதம்; பெண்கள் 79.94 சதவீதம். ஆண்களை விட 5 சதவீதம் கூடுதலாக பெண்கள் வாக்களித்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலின்போது இந்த தொகுதியில் 75.8 சதவீதம் வாக்குகள் பதிவானது. இப்போது இடைத்தேர்தலில் 2 சதவீதம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.வாக்குப்பதிவு முடிந்ததும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. 242 சாவடிகளின் வாக்குப்பெட்டிகளும் 24 மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அனைத்து பெட்டிகளும் வந்து சேர இன்று அதிகாலை ஆகிவிட்டது.
கல்லூரியில் உள்ள ஒரு அறையில் பெட்டிகள் வைக்கப்பட்டு, அறை சீல் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. கல்லூரி வளாகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (21ம் தேதி) நடக்கிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இயந்திர வாக்குப்பதிவு என்பதால் ஒரு மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியவரும். பகல் 1 மணிக்குள் முடிவு வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடை களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook