வாளியில் இருந்த சுடு தண்ணீரில் கையை வைத்து பார்த்தபோது ‘ஷாக்’ அடித்து ஆசிரியை பலி : புழலில் சோகம்
புழல் : ‘தண்ணீர் சூடாகி விட்டதா?’ என்று கையை வைத்து பார்த்தபோது ஷாக் அடித்து ஆசிரியை பலியான சம்பவம் புழல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை அருகே புழல் வஉசி முதல் தெருவில் வசிப்பவர் சரவணன் (26). இவரது மனைவி சந்தியா (23). இவர்கள் இருவரும் செங்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சாதனா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. இன்று காலை சந்தியா குளிக்க சென்றார். வாளியில் உள்ள தண்ணீரை சூடுபடுத்த டிப்பர் ஹீட்டரை பயன்படுத்தினார். சிறிது நேரம் கழித்து, ‘சூடாகி விட்டதா?’ என்று பார்ப்பதற்காக தண்ணீரில் கையை வைத்தபோது, சற்றும் எதிர்பாராதவகையில் ஷாக் அடித்து சந்தியா தூக்கி வீசப்பட்டார். சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு, கணவர் சரவணன் ஓடி வந்தார். மனைவியை உடனடியாக செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்துள்ளார். சந்தியாவின் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். ஷாக் அடித்து இளம் ஆசிரியை பலியான சம்பவம், புழல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.