சென்னை : தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் மரபுசாரா எரிசக்தி வளம் பற்றிய 2 நாள் சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கை தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாடு தற்காலிகமான பிரச்னைதான். இதைப் போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக குறையும். 2013-14ம் ஆண்டு முழுமையாக நீங்கும். 2015-2016ம் ஆண்டு தேவைக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழகம் திகழும்.
மரபு சார்ந்த அடிப்படையில் அனல்மின் திட்டங்கள், நீர்மின் திட்டங்கள் மூலமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு தேவையான மூலப்பொருட்களான நிலக்கரி, எரிவாயு, தண்ணீர் போதுமான அளவு நம்மிடம் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் மின்பற்றாக்குறையை ஈடுசெய்ய ஒரே வழி சூரிய ஒளி, காற்றாலை, பயோமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மரபுசாரா மின்உற்பத்தி திட்டம்தான். சூரியஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் வகையில் விரைவில் புதிய சூரிய சக்தி மின் கொள்கையை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார். சூரியஒளி, காற்றாலை, சாண எரிவாயு உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தியை பயன்படுத்தி 7,5000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. சூரியஒளியை பயன்படுத்தி 2015-2016ம் ஆண்டில் 3000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. புதிய சூரிய சக்தி கொள்கையில் இந்த இலக்கை அடைய முடியும். தமிழக அரசின் மின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவி செய்வதே கிடையாது. சூரியஒளி மின்சக்தி திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி உதவி செய்ய வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook