தண்டையார்பேட்டை : திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60வது பிறந்த தினத்தை முன்னிட்டு தண்டையார்பேட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. ஏ.டி.மணி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பிகே சேகர்பாபு வரவேற்றார். இதில் 15 ஏழை பெண்களுக்கு மாவு அரைக்கும் இயந்திரம், 50 பேருக்கு இட்லி பாத்திரம், மற்றும் மூன்று சக்கர சைக்கிள், பூ வியாபாரம் செய்ய குடை என 126 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசுகையில், ‘‘இன்றைக்கு சிலர் தங்கள் பிறந்த தினத்தை பகுத்தறிவு கொள்கைக்கு எதிராக கொண்டாடுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாகவும், மக்களுக்கு உதவிகள் செய்யும் விழாவாகவும் கொண்டாடுவது பாராட்டுக்குரியது. இன்றைக்கு திரைப்படங்களில் நடித்து விட்டால் முதல்வராகி விடலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இந்த நிலை வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. ஸ்டாலின் மிசா உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளை சந்தித்து மக்களை அரவணைத்து தலைவராகியவர். நான் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவராக கருதுவது கலைஞரும், ஸ்டாலினும்தான்‘‘ என்று பேசினார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், காதர் மொய்தீன், பொன்குமார், மற்றும் பைரோஸ் அகமது, திமுக துணை பொதுச்செயலாளர் எஸ்.பி. சற்குண பாண்டியன், டிகேஎஸ் இளங்கோவன் எம்.பி., இரா.மதிவாணன், செங்கை சிவம், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ, சுந்தரராஜன், பார்வதி நாராயணசாமி, இளைய அருணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook