புதுடெல்லி: நதிநீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. நதிநீர் இணைப்பு திட்டம் கடந்த 2002ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் கொண்டு வரப்பட்டது. ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் போடப்பட்ட இந்த திட்டம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தக்குழு ஆய்வு நடத்தி நதிநீர் இணைப்பு திட்டத்தை இமாலய பிரிவு, தீபகற்ப பிரிவு என இரண்டாக பிரித்து அறிக்கை தாக்கல் செய்தது.
இமாலய பிரிவில் கங்கை, பிரம்மபுத்ரா போன்ற நதிகளும், தீபகற்ப பிரிவில் காவிரி, மகாநதி, கோதாவரி, வைகை, பெண்ணாறு போன்ற நதிகளும் இடம் பெற்றிருந்தன. எந்தெந்த நதிகளை எந்தெந்த நதிகளுடன் இணைக்கலாம் என்ற யோசனையையும் இந்தக் குழு முன்வைத்தது. அதன் பின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தலைமை நீதிபதி எச்.எல்.கபாடியா, எஸ்.குமார் மற்றும் ஏ.கே.பட்நாயக் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்து, நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான திட்டமிடுதல் மற்றும் அமல்படுத்துதலுக்காக உயர் நிலை கமிட்டி ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த கமிட்டியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர், செயலாளர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர், நீர்வள அமைச்சகம், நிதி அமைச்சகம், திட்ட கமிஷன் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிந்துரை செய்யும் 4 நிபுணர்கள் ஆகியோர் இடம் பெற வேண்டும். மாநில அரசுகளின் பிரதிநிதிகள், 2 சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவியாக இருக்கும் வக்கீல் ரஞ்சித் குமார் ஆகியோரும் கமிட்டியில் இடம்பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook