கிரெடிட் கார்டு சோகங்கள் சினிமா ஆகிறது
சென்னை : கிரெடிட் கார்டு பணத்தை திருப்பி கட்ட முடியாதவர்களின் பிரச்னை ‘மகான் கணக்கு’ என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி படத்தின் இயக்குனர் சம்பத் ஆறுமுகம் கூறியதாவது: வெளிநாட்டு வங்கிகள், தனியார் வங்கிகளில் கடன் பெற்றும், கிரெடிட் கார்டு வாங்கியும் சிக்கலில் மாட்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். தமிழகத்தில் இவ்வாறு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக போராட தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்டோர் நல சங்கம் ஒன்று மதுரையில் இயங்குகிறது. ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பிரச்னை பல குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டன.
கோவையில் மொபட் வாங்குவதற்காக கடன் பெற்ற ஒரு குடும்பம் கடனை திருப்பி செலுத்த வழியில்லாமல் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுபோல பாதிக்கப்பட்டவர்கள் கதி என்ன என்பதை மையமாக வைத்து ‘மகான் கணக்கு’ படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன். கடன் பெற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் வங்கிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றிய காட்சி படத்தில் இருக்கிறது. ரமணா, ரிச்சா சின்ஹா நடிக்கின்றனர். இவ்வாறு இயக்குனர் சம்பத் ஆறுமுகம் கூறினார்.