கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் கால்ஷீட் : திவ்யா பேட்டி !
சென்னை : எனது கால்ஷீட் வேண்டுமென்றால் கேட்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று நடிகை திவ்யா கூறினார். ‘குத்து’, ‘வாரணம் ஆயிரம்’ உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் திவ்யா. இவர் கூறியதாவது: தமிழில் வெற்றி மாறன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளேன். கன்னடத்தில் உபேந்திராவுடன் 3டியில் தயாராகும் படத்தில் நடிக்கிறேன். இதில் எமதர்மனாக அம்பரீஷ் நடிக்கிறார். அவருடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. அவர் செட்டில் இருந்தால், நான் வாய் திறந்துகூட பேசமாட்டேன். சமீபகாலமாக நான் படங்களில் நடிக்க அதிக சம்பளம் கேட்பதாகவும், பல ஸ்கிரிப்டை ஒதுக்கிவிடுவதாகவும் கூறுகிறார்கள். அது உண்மைதான். ஆனால் இதெல்லாமே சம்பளத்துக்காகத்தான் என்று கூற முடியாது. எத்தனையோ படங்களில் சம்பளமே வாங்காமல் கவுரவவேடத்தில் நடித்திருக்கிறேன். என்னிடம் சொல்லப்படும் ஸ்கிரிப்ட் என்னை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருந்தால் ஏற்கிறேன். கதையே பிடிக்கவில்லையென்றால் எப்படி நடிப்பது. மேலும் சில தயாரிப்பாளர்கள் என்னிடம் பேசாமலே நான் நடிக்க சம்மதித்துவிட்டதாக அறிவிக்கிறார்கள். தங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபிறகு அதை அறிவிக்கட்டும். என்னுடைய கால்ஷீட் வேண்டுமென்றால் நான் கேட்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். இவ்வாறு திவ்யா கூறினார்.