கவுரவ வேடத்தில் மீண்டும் ரஜினி ?
சென்னை : ‘3’ படத்தில் ரஜினியை கவுரவ வேடத்தில் நடிக்க வைப்பது குறித்து யோசித்து வருவதாக அவரது மகள் ஐஸ்வர்யா கூறினார். ஷாருக்கான் நடித்த ‘ரா ஒன்’ இந்தி படத்தில் கவுரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார். அவரது ‘ராணா’ படம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இளைய மகள் சவுந்தர்யா இயக்கும் ‘கோச்சடையான்’ 3டி அனிமேஷன் படத்தில் நடிக்க உள்ளார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கணவர் தனுஷ் நடிக்கும் ‘3’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்காக தனுஷ் எழுதி பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி டி’ பாடல் பிரபலமாகி வருகிறது. இப்பாடலை கேட்டு ஐஸ்வர்யாவையும், தனுஷையும் ரஜினி பாராட்டினார். இந்நிலையில் ‘3’ படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினியை நடிக்க வைத்தால் படத்துக்கு பிளஸ் என்று ஐஸ்வர்யாவிடம் சில வினியோகஸ்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுபற்றி தனுஷுடன் ஐஸ்வர்யா ஆலோசித்து வருகிறார். இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், ‘‘ஏற்கனவே ‘3’ படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் அப்பாவிடம் சொல்லி இருக்கிறேன். கவுரவ வேடத்தில் நடிக்கிறீர்களா என்று அவரிடம் கேட்பதா, வேண்டாமா என்பதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’’ என்றார்.