பாசிட்டிவாக சிந்திக்க தெரியாதா? டைரக்டர்கள் மீது நடிகை நீது சந்திரா பாய்ச்சல்
சென்னை : நாட்டில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதை காட்டாமல் வறுமை, வன்முறை, அடிதடி என எதிர்மறை கருத்துகளையே சினிமாவில் காட்டுவது தவறு என்று நடிகை நீது சந்திரா கூறினார். இதுபற்றி நீது சந்திரா கூறியதாவது: தமிழில் ‘யாவரும் நலம்’ படத்தில் நடித்தேன். அடுத்து அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ படத்தில் நடித்து வருகிறேன். இரண்டுமே வெவ்வேறு கதை அம்சங்கள் கொண்டது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. போஜ்புரி மொழியில் ‘தேஸ்வா’ என்ற படம் தயாரித்திருக்கிறேன். எனது சகோதரர் நிதின் இயக்கி உள்ளார். நாடு மற்றும் மாநிலங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் பெரும்பாலான படங்களில் வறுமை, வன்முறை, அடிதடி போன்ற எதிர்மறையான கருத்துக்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகின்றன. ஏன், பாசிட்டிவ்வாக சிந்திக்க டைரக்டர்களுக்கு தெரியாதா? நான் பீகாரில் பிறந்தேன். இம்மாநிலம் பற்றி எடுக்கப்படும் படங்கள் எதிர்மறையான தகவல்களுடனே காட்டப்படுகிறது. ஆனால் இங்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதை யாரும் காட்டுவதில்லை. அந்த நடைமுறையை உடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் ‘தேஸ்வா’ படம் எடுக்கப்படுகிறது. பீகாரில் உள்ள நல்ல விஷயங்கள்தான் படத்தில் பிரதானமாக கூறப்படுகிறது. இப்படம் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவ்வாறு நீது சந்திரா கூறினார்.