ஆவடி : அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே சிடிஎச் சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. சாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளுக்கான சான்றிதழ்கள் பெற தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் சிறிய கட்டிடத்தில் இயங்கிவருகிறது. இதனால், அடிப்படை வசதியும் இல்லை. மக்கள் கூட்டமாக வந்தால், அலுவலகத்தில் நிற்க இடம் இல்லை. சான்றிதழ் பெற வருபவர்களில் பலரும் அலுவலகத்துக்கு வெளியில்தான் காத்திருக்க வேண்டியுள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால், சுமார் அரை கி.மீ. தூரத்தில் உள்ள கடைகளுக்கு சென்று குடிநீர் குடிக்கின்றனர். கழிவறை வசதி கிடையாது. இதனால், மக்கள் அலுவலகத்தின் பின்புறம் சிறுநீர் கழிக்கிறார்கள். அலுவலகத்தின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் தற்போது பெய்யும் மழையால் நிரம்பி, தண்ணீர் அலுவலகம் முன்பு குளம்போல் தேங்கி நிற்கிறது. ‘‘அம்பத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டிதர வேண்டும்’’ என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook