தெலங்கானாவுக்காக உண்ணாவிரதம் : காங்கிரஸ் எம்எல்ஏ மீது தற்கொலை முயற்சி வழக்கு
ஐதராபாத்,: தெலங்கானா தனி மாநிலம் கோரி கடந்த 1-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ மீது போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆளும்கட்சியான காங்கிரசை சேர்ந்த எம்எல்ஏ வெங்கட் ரெட்டி, தெலங்கானாவுக்கு ஆதரவாக கடந்த 1-ம் தேதி, நல்கொண்டாவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து நேற்று மாலை உண்ணாவிரத பந்தலுக்குள் போலீசார் அதிடியாக நுழைந்தனர். அப்போது வெங்கட் ரெட்டி ஆதரவாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வெங்கட் ரெட்டியை வலுக்கட்டாயமாக தனி வேனில் ஏற்றி ஐதராபாத் கொண்டு சென்றனர். அங்குள்ள நிஜாம் மருத்துவக் கல்லூரியில் அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. மருத்துவமனையிலும் உண்ணாவிரதத்தை தொடரப் போவதாக ரெட்டி தெரிவித்துள்ளளார். இதற்கிடையே, வருவாய்த்துறை புகாரின் பேரில் வெங்கட் ரெட்டி மீது தற்கொலை முயற்சி வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.