சேந்தமங்கலம்: நாமக்கல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஜவ்வரிசி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் ரூ.3 கோடி வர்த்தகம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 60க்கும் அதிகமான சேகோ பேக்டரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளுக்கு கொல்லிமலை, பச்சமலை, ஈரோடு, பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில்
இருந்து மரவள்ளி கிழங்கு கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் தினமும் சுமார் 10 ஆயிரம் மூட்டை ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, நாமக்கல் பகுதியில் தொடர்
மழை பெய்து வருவதால் ஜவ்வரிசி தொழில் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜவ்வரிசியை உலர வைக்க முடியவில்லை. இதனால் பணிகள் நடக்காமல் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர் சங்க செயலாளர் முத்து ராஜா கூறியதாவது: நாமக்கல் பகுதியில்
தொடர் மழையால் ஜவ்வரிசி தொழில் பாதிக்கப்பட்டு, முற்றிலும் முடங்கியுள்ளது. ஆலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் கிழங்குகளை அரைக்க முடியவில்லை. உற்பத்தி பாதிப்பால்
வெளிமாநிலங்களுக்கு ஜவ்வரிசி அனுப்ப முடியவில்லை. இதனால் நாளொன்றுக்கு ரு.3 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு ஜவ்வரிசி மூட்டை தற்போது ரூ.2500 ஆக குறைந்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook