சித்தூர்: சுற்றுலா சென்ற மாணவர்கள் ஆற்றில் இறங்கி பந்து விளையாடினர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 6 மாணவர்கள் மற்றும் ஆசிரியை பரிதாபமாக
இறந்தனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா (35). இவர் தனது வீட்டின் அருகே டுடோரியல் காலேஜ் நடத்தி வருகிறார். இவரிடம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 5 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 73 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தன்னிடம் படிக்கும் 73 மாணவ, மாணவிகளை கோதாவரி ஆற்றுக்கு லட்சுமி பிரசன்னா, நேற்று சுற்றுலா அழைத்து சென்றார்.
காலை 11.30 மணியளவில் கோதாவரி ஆற்றுக்கு சென்ற இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் 4 மாணவர்கள், தங்களுக்கு நீச்சல் தெரியும் என
லட்சுமி பிரசன்னாவிடம் தெரிவித்துவிட்டு ஆற்றில் இறங்கி பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். கோதாவரி ஆற்றுப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பகல் 1 மணியளவில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுழலில் சிக்கிக்கொண்ட மாணவர்கள் அலறினர்.
இதைக்கண்ட ஆசிரியை மற்றும் 3 மாணவர்களும் பதறியபடி ஆற்றில் இறங்கி மாணவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் இவர்களும் சிக்கி அலறினர். இதைக்கண்ட அங்கிருந்த ஆட்டோ
டிரைவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஓடிவந்து ஆற்றில் இறங்கினர். ஆனால் அதற்குள் ஆசிரியை மற்றும் 6 மாணவர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் என 30க்கும் அதிகமானவர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். நேற்றிரவு அங்குள்ள கரையில் சிவகிருஷ்ணா (9), வெங்கடரமணா (14),
சுனிதா (10) ஆகிய 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இன்று காலை ஆசிரியை லட்சுமி பிரசன்னா மற்றும் மோகன் (14), வெங்கடேஷ் (9,) ராஜேஸ்வரி (14) ஆகிய 4 பேரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். இறந்து போன மாணவர்களில் 4 பேர், வீட்டுக்கு ஒரே வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook