ஒகேனக்கல்லில் குளிக்க பரிசல் சவாரிக்கு தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் !
ஒகேனக்கல் : ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 24 ஆயிரம் கன அடி தண்ணீர், பிலிகுண்டுலுவில் பதிவாகியிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீராக இருந்தால் சீராக ஒகேனக்கல் அருவிகளில் நீர் கொட்டும். ஆனால் தற்போது மழை பெய்து காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால் அருவியில் மரத்துண்டுகள், கற்களுடன் சேர்ந்து நீர் கொட்டுகிறது.
இதனால் அருவியில் குளிக்கும் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும். எனவே நேற்று மாலை முதல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டாறு வெள்ளம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் பரிசல் சவாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பரிசல்கள் கரையோரம் முடங்கிக் கிடக்கின்றன. அருவியில் குளிக்க, பரிசல் சவாரிக்கு இன்றும் தடை நீடிக்கிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று வெளி மாநில மற்றும் தமிழக சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் வந்தனர். ஆனால் அருவியில் குளிக்கவும், காவிரியாற்றில் பரிசல் சவாரிக்கும் விதிக்கப்பட்ட தடையால் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒகேனக்கல், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சின்னாற்றில் மழை வெள்ளம் செந்நிறத்தில் ஓடுகிறது. இந்த வெள்ள நீர் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் கீழ்ப்புறத்தில் சென்று காவிரியில் கலந்து மேட்டூர் அணைக்கு செல்லும்.