புழல்: முன்னறிவிப்பின்றி புழல் ஏரி திறந்து விடப்பட்டதால் 100 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 3150 மில்லியன் கன அடி. ஏரிக்கு நீர்வரத்து 2305 கன அடியாக உள்ளது. சமீபத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், புழல் ஏரி முழு கொள்ளவை கடந்த 28ம் தேதி எட்டியது. இதையடுத்து அன்று காலை 10.30 மணிக்கு புழல் ஏரி மதகின் ஒரு பகுதியில் 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
படிப்படியாக மழை அதிகரித்ததால் ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தது. இதனால் 30ம் தேதி இரு ஷட்டர் வழியாக 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 31ம் தேதி முதல் நேற்றிரவு வரை 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மழை மேலும் வலுத்ததால் பம்மது குளம் ஏரி நிரம்பி புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் எந்த முன்னறிவிப்பும் இன்றி பொதுப்பணித் துறையினர் நள்ளிரவில் 1400 கன அடி நீர் திறந்து விட்டனர்.
இந்த நீர், புழல் பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழன் நகர், காஞ்சி அருள் நகர், தனலட்சுமி நகர், மீனாட்சி நகர், மேக்ரோ மார்வெல் லேக்வியூ ஆகிய பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. 100க்கும் அதிகமான வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் தண்ணீரில் தத்தளித்தனர். மேலும், செங்குன்றம் பைபாஸ் சாலையில் மேம்பாலம் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்து மின் வயர்கள் அறுந்து கீழே விழுந்தன. வடபெரும்பாக்கம்-மாதவரம் நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து அங்குள்ள பகுதிகளிலும் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
கொசப்பூர் தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த வழியாக செல்லும் 30க்கும் அதிகமான கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். கொசப்பூர் பகுதியில் பாலம் கட்ட பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழன் நகர், காஞ்சி அருள் நகர், தனலட்சுமி நகர் பகுதி மக்கள் கூறுகையில், ‘எந்த முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவில் புழல் ஏரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
புழல்-வடபெரும்பாக்கம் வரை உள்ள புழல் ஏரியின் கால்வாய் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாததால் தண்ணீர் இப்பகுதிகளில் புகுந்துள்ளது. எனவே தடுப்பு சுவர் உடனே கட்ட வேண்டும் என்றனர். மணலி அருகே உள்ள ஆமுல்லைவாயல் தரைபாலத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆமுல்லைவாயல், வைக்காடு ஆகிய பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் தவித்தனர். இதையடுத்து அந்த பாலத்தில் பொதுமக்கள் நடந்துவர வார்டு கவுன்சிலர் துரை தலைமையில் கம்புகள் கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு!
மழைநீர் வரத்து அதிகரித்ததால் செம்பரம்பாக்கம் ஏரி இன்று காலை திறக்கப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி. தற்போது 2,882 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 978 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு குடிநீருக்காக 150 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21. 1 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் ஏரியை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். கலெக்டர் ஆசிஷ் சட்டர்ஜி உத்தரவின் பேரில் இன்று காலை 11 மணியளிவில் ஏரியின் மூன்றாவது ஷட்டர் வழியாக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் சிறுகளத்தூர், குன்றத்தூர், பெருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை வழியாக அடையாறு ஆற்றிற்கு சென்று கடலில் கலக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook