சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 6 அமைச்சர்கள், நாளை பிற்பகல் 3 மணிக்கு பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் கவர்னர் மாளிகையில் நடந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மே 16-ம் தேதி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவை பதவி ஏற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மரியம்பிச்சை, விபத்தில் இறந்ததால் முகமது ஜான் புதிய அமைச்சரானார். சட்ட அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா, திடீரென நீக்கப்பட்டார். அமைச்சர் கருப்பசாமி, உடல்நலக்குறைவால் கடந்த மாதம் இறந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது அமைச்சரவை மாற்றப்பட்டது.
இந்நிலையில், 3-வது முறையாக அமைச்சரவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக மாற்றினார். செந்தமிழன், புத்திசந்திரன், எஸ்.பி.சண்முகநாதன், என்.ஆர்.சிவபதி, ஆர்.பி.உதயகுமார், சண்முகவேலு ஆகிய 6 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக வி.மூர்த்தி (மாதவரம்), சுந்தர்ராஜன் (பரமக்குடி), தாமோதரன் (கிணத்துக்கடவு), ராஜேந்திர பாலாஜி (சிவகாசி), காமராஜ் (நன்னிலம்), பரஞ்சோதி (திருச்சி மேற்கு) ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர்கள் செங்கோட்டையன், பி.வி.ரமணா, செல்வி ராமஜெயம், டி.கே.எம்.சின்னையா, எம்.சி.சம்பத் ஆகியோரது இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் குளறுபடி மற்றும் சிறப்பாக செயல்படாததே அமைச்சர்கள் நீக்கத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தல் குழப்பம் காரணமாக தங்க.தமிழ்செல்வன், என்.ஆர்.சிவபதி, மலரவன் ஆகியோரது மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி, நாளை பிற்பகல் 3 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடக்கிறது. கவர்னர் ரோசய்யா திருப்பதி சென்றுள்ளார். அவர் இன்றிரவு சென்னை திரும்புகிறார். அதனால், நாளை பிற்பகல் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள், கவர்னர் மாளிகையில் செய்யப்பட்டு வருகின்றன. பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook