மதுரை : அத்வானி செல்லும் வழியில் வெடிகுண்டை மறைத்து வைத்து சதி திட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம், ஆலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மேலும், பைக்குகளில் வந்து சென்ற மர்ம வாலிபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை சென்று வருகிறார். தமிழகம் வந்த அவர் 2-ம் கட்ட யாத்திரையை நேற்று முன்தினம் மதுரையில் துவக்கினார். அன்று காலை 10.15 மணிக்கு ரத யாத்திரை துவங்கியது. மதுரை - ராஜபாளையம் சாலையில் திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டி வழியாக யாத்திரை செல்ல இருந்தது. இந்நிலையில், ஆலம்பட்டி அருகே தரைப்பாலத்தின் அடியில் 6 அடி நீளமுள்ள பிளாஸ்டிக் பைப் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 4 அடி நீளத்துக்கு, ‘நியூ பவர் ஜெல்’ என்ற சக்தி வாய்ந்த வெடி பொருள் நிரப்பப்பட்டிருந்தது. அங்கிருந்து 96 மீட்டர் தூரத்தில் ஒரு பள்ளத்தில் 12 வோல்ட் சக்தி கொண்ட பேட்டரி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வெடிபொருள் நிரப்பிய பைப்பும் பேட்டரியும் வயர் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. கிராமத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசார் அதிரடியாக செயல்பட்டு, வெடிகுண்டை செயலிழக்க செய்து அப்புறப்படுத்தினர். தமிழகத்தில் அத்வானியை குண்டு வைத்து கொல்ல முயற்சி நடந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரத யாத்திரை செல்லும் வழிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.
இதற்கிடையில், தரைப்பாலத்தில் குண்டு மறைத்து வைக்கப்பட்டது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆலம்பட்டி, திருமங்கலம், திரளி, அச்சம்பட்டி, புதுப்பட்டி, மேலக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சிறப்பு புலனாய்வு போலீசார் 24 மணி நேரமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிச்சைக்காரர், மனநோயாளிகள் போல மாறுவேடத்தில் சென்றும் துப்பு துலக்கும் பணியில் இறங்கியுள்ளனர். முதலில் வெடி மருந்தை திரவமாக மாற்றி பைப்பில் ஊற்றி பிறகு, பாலத்தின் அடியில் மறைத்து வைத்திருக்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. அந்த வெடி பொருட்கள், குவாரிகளில் பயன்படுத்தக்கூடியது. அரசு குடோன்களில் மட்டுமே கிடைக்கக்கூடியது என கூறப்படுகிறது. இதனால், குவாரி அதிபர்கள் 20 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டை வெடிக்க செய்ய டூவீலர் பேட்டரியை பயன்படுத்தியுள்ளனர். அதில் உள்ள நம்பர் அழிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் மிகவும் குறுகியது என்பதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். மேலும், பாலத்தை கடக்கும்போது வாகனங்கள் மெதுவாக செல்லும். இதை நன்கு தெரிந்துகொண்டே தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றனர் என்று தெரிகிறது. உள்ளூர் நபர்களின் உதவி இல்லாமல் இச்செயலில் விஷமிகள் ஈடுபட்டிருக்க முடியாது என்றும் போலீசார் கருதுகின்றனர். குண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முதல் நாள் 5 பைக்குகளில் சில வாலிபர்கள் வந்து சென்றதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பேட்டரிக்கு அருகே கிடந்த புதிய சட்டையை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் ‘ரோமியோ திருமங்கலம்’ என்ற டெய்லரின் பெயர் உள்ளது. இதன் அடிப்படையில், திருமங்கலம் டெய்லர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆலம்பட்டி பகுதியில் இருந்து கடந்த சில நாட்களில் பேசப்பட்ட செல்போன் எண்கள் தொடர்பான விவரம், செல்போன் டவர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. மத்திய உளவு பிரிவு, சிறப்பு புலனாய்வு பிரிவு, கியூ பிராஞ்ச், மாநில உளவு பிரிவு உள்ளிட்ட பல பிரிவு போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மதுரை, நெல்லையில் உள்ள தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் ரகசிய கண்காணிப்பு பட்டியலில் உள்ளவர்களின் செயல்பாடுகள் குறித்தும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook