திருச்செந்தூர் கோயிலில் நாளை சூரசம்ஹாரம் : பக்தர்கள் குவிகின்றனர்
திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகம் மற்றும் விடுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். 4ம் நாளான நேற்று பகல் 1.45 மணிக்கு ஜெயந்திநாதர் தங்க தேரில் உள்பிரகாரங்களில் வலம் வந்து சண்முகவிலாசம் மண்டபம் சேர்ந்தார். 2.15 மணிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சண்முக விலாசத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி எழுந்தருளி கந்தசஷ்டி மண்டபம் வந்தடைந்தார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு தங்கத்தேரில் ஜெயந்திநாதர் கிரிபிரகார வலம் வந்தார்.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (திங்கள்) நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சூரனை வதம் செய்கிறார். சூரசம்ஹாரத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.