திருவள்ளூர் : திருவள்ளூரில் ஜே.என் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, ஆவடி சாலை, பஸ் நிலையம் சாலை, செங்குன்றம் செல்லும் சாலைகள் மிகவும் பரபரப்பாக காணப்படும். இங்கு எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முக்கிய சாலையில் 100க்கும் அதிகமான மாடுகள் தினமும் சுற்றி திரிகின்றன. சாலையில் படுத்து கொள்வதால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. ஜே.என்.சாலை, பஸ் நிலையம், பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு, காந்தி சாலை, நேதாஜி சாலை, பூங்கா நகர், நகராட்சி அலுவலம் எதிரே உள்ள பகுதியில் உலா வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
நகராட்சியில் சார்பில் மாட்டின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதை கண்டு கொள்வதில்லை. நகராட்சி ஆணையர் சரவணகுமார், கலெக்டர் அனுமதி பெற்று புளூகிராஸ் மூலம் மாடுகளை அப்புறப்படுத்துவேன் என்று 2 வருடத்துக்கு முன்பு பதவியேற்ற போது கூறினார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையில் மாடுகள் சுற்றித் திரிவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் விளக்குகளும் இரவில் சரியாக எரிவதில்லை. இதனால் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் சாலையில் மாடு படுத்திருப்பதை அறியாமல் வேகமாக வரும் வானகங்கள் மாடுகள் மீது மோதி விபத்து, உயிரிழப்பு சம்பவம் நடக்கிறது. திருவள்ளூர் கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் இந்த சாலை வழியாக செல்கிறார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று நகராட்சியிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook