இலங்கை மீனவர்கள் மீண்டும் அட்டூழியம் தமிழக மீனவருக்கு கத்திகுத்து
வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். கத்தியால் குத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த விழுந்தமாவடியை சேர்ந்தவர் அர்ச்சுனன்(27). இவரது தம்பி விஜயசீலன்(24) மற்றும் அதே ஊரை சேர்ந்த விக்னேஷ்(17), கந்தன்(18) ஆகியோர் பைபர் படகில் நேற்று கடலுக்கு சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கில் வந்து கொண்டிருந்தபோது ஒரு படகில் இலங்கை மீனவர்கள் அங்கு வந்தனர். பின்னர் அர்ச்சுனனை கத்தியால் குத்தினர். மற்ற மீனவர்களையும் தாக்கினர். பின்னர் தமிழக மீனவர்களின் படகில் இருந்த மீன்களை கொள்ளையடித்து கொண்டு அவர்களை விரட்டி அடித்தனர். கத்தியால் குத்தியதில் அர்ச்சுனனின் கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கரைக்கு தகவல் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஆறுகாட்டுத்துறை கரைக்கு திரும்பினர். தகவலறிந்து அங்கு மீனவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.