தேர்தல் முடிவை மாற்றியதால் குழப்பம் பூண்டி ஒன்றிய கவுன்சிலர் யார்? : கலெக்டரிடம் வி.சிறுத்தைகள் புகார்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட் டம் பூண்டி ஒன்றியத்தில் 3வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாண்டியன் (திமுக), வெங்கடேசன் (அதிமுக), பிரதீப் (எ) அசோக்குமார் (வி.சிறுத்தை), ஜீவரத்தினம் (தேமுதிக)போட்டியிட்டனர். கடந்த 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் பிரதீப் (எ)அசோக்குமார், 1037 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.தேர்தல் கமிஷன் இணைய தளத்திலும் விடுதலை சிறுத்தை வேட்பாளர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் வெங்கடேசன், 1155 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாகவும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் பிரதீப் 880 வாக்குகள் பெற்றதாகவும் தேர்தல் கமிஷன் இணையதளத்தில் நேற்று மதியம் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பிரதீப் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட செய லாளர் பாலசிங்கம் தலைமையில் 50 பேர் நேற்று மாலை பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் அலுவலர் லட்சுமி நாராயணன், ‘கம்ப்யூட்டர் தவறு காரணமாக பிரதீப் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டனர். அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்Õ என்று கூறினார். அவருடன் கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து, திருவள்ளூர் கலெக்டரிடம் இன்று புகார் கொடுத்தனர். ‘விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று கலெக்டர் தெரிவித்தார்.