7 ஆண்டு சிறை தண்டனையுடன் பசு வதை தடை சட்டம் குஜராத்தில் அமல்
அகமதாபாத் : பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யும் கடுமையான பசு வதை தடை சட்டம் குஜராத் மாநிலத்தில் இன்று அமலுக்கு வந்தது.
குஜராத் உள்பட பாஜ ஆளும் மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. குஜராத்தில் உள்ள பழைய சட்டப்படி பசு வதை குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு மீது அதிகபட்சம் ஓர் ஆண்டு சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும். இந்த சட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்காததை தொடர்ந்து சட்டத்தை கடுமையாக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது.
அதன்படி, பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்த மசோதாவுக்கு கடந்த வாரம் மாநில கவர்னர் கமலா பெனிவால் அனுமதி கொடுத்தார்.
இதை தொடர்ந்து அரசு இதழில் சட்டம் வெளியிடப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் பொறுப்பு காவல்துறை சப்இன்ஸ்பெக்டர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.