ஊராட்சி தலைவர் மிரட்டல் : பாதுகாப்பு கேட்டு கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகை
காட்டுமன்னார்கோவில் : அதிமுக ஊராட்சி தலைவர் வீடுபுகுந்து மிரட்டுவதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தை கிராம மக்கள் இன்று முற்றுகையிட்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணநல்லூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த வனிதா ரவிச்சந்திரன் வெற்றி பெற்றார். தேர்தலின்போது அவருக்கு எதிராக ஒரு பிரிவினர் தேர்தல் வேலை பார்த்தனர். இந்நிலையில், வெற்றி பெற்ற வனிதா ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக சென்றார். அப்போது அவருக்கு எதிராக தேர்தல் பணி செய்தவர்களின் வீட்டு கதவுகளை தட்டி வெளியே வரச்செய்து கடுமையான வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. கடைகளையும், வீடுகளையும் ஊராட்சி தலைவரின் ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீராணநல்லூர் பகுதியை சேர்ந்த 150க்கும் அதிகமானோர் இன்று காலை காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்களை மிரட்டிய ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடு, கடைகளை தாக்கியதால் அச்சத்தில் உள்ளோம். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், ‘’ஊராட்சி தலைவர் தேர்தலில் வனிதா ரவிச்சந்திரனுக்கு எதிராக வேலை செய்ததால், அவர் எங்களை மிரட்டினார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து விட்டு மதம் மாறுவோம்’’ என்றனர்.