ஊத்துக்கோட்டை: எல்லாபுரம் ஒன்றிய தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பெரியபாளையம் அருகே திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் இன்று அதிகாலை, மறியலில் ஈடுபட்டனர். எல்லாபுரம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 369 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாவட்ட கவுன்சிலர்களாக அதிமுகவை சேர்ந்த ரவிசந்திரன், டி. சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஒன்றிய கவுன்சிலர் 20 பேரில் அதிமுகவினர் 11 பேர், திமுகவினர் 3 பேர், பாமகவினர் 2 பேர், கம்யூனிஸ்ட் கட்சியினர் 2 பேர், காங்கிரஸ், சுயேட்சை ஆகியோர் தலா ஒரு இடம் ஆக மொத்தம் 19 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 20வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை இரவு 1 மணிக்கு முடிந்து. இதில் 55 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை சேர்ந்த முரளி முன்னிலையில் இருந்தார். அப்போது அதிமுக வேட்பாளர் குழந்தைவேலு தேர்தல் அதிகாரிகளிடம் நீங்கள் ஓட்டுக்களை சரியாக எண்ணவில்லை.
மீண்டும் வாக்குகளை எண்ண வேண்டும். இல்லையெனில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்தார். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 3 மணியளவில் திமுக வேட்பாளர் முரளியின் ஆதரவாளர்கள், முரளி வெற்றி பெற்றதாக முடிவை அறிவிக்க வேண்டும் என்று கூறி பெரியபாளையம்- சென்னை நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ஊத்துத்கோட்டை டிஎஸ்பி பாரதி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு திமுக வேட்பாளர் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்தவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிக்கு வெளியே கட்சியினர், மக்கள் கூடியிருந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோஷ்டி மோதல் உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டி விட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook