ஆந்திராவில் இருந்து சந்தனக் கட்டை கடத்திய 5 பேர் சுற்றிவளைப்பு!
திருப்பதி: சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் மண்டலம் தம்புகாணிப்பள்ளி கிராமம் அருகில் இருந்து சந்தனக் கட்டைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பலமனேர், பங்காருபாளையம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். தம்புகாணிப்பள்ளி கிராமம் அடுத்த தாபா ஓட்டல் அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 12 சந்தனக் கட்டைகள் கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து காரில் இருந்த நீருகட்டுவாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சந்திரா (29), திருப்பதி அஞ்சிசீனு (27), தேவேந்திரா (30), கே.வி.பள்ளி திலீப்குமார் (28), பங்காருபாளையம் சீனிவாசலு (30 ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி தாபா ஓட்டல் பின்புறம் புதரில் பதுக்கி வைத்திருந்த மேலும் 24 சந்தனக் கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை பெங்களூருக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் ரூ.35 ஆயிரம், 7 செல்போன், 2 பைக், காருடன் 36 சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.24 லட்சம் என்று கூறப்படுகிறது.