சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நகர்பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு என்பதால், தொடங்கிய சிறிது நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரியவந்தது. சென்னை உள்பட 10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களே அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் மட்டும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுகவும் அதிமுகவும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன. பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிமுக முந்துகிறது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 759 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதல்கட்ட தேர்தலில் 77.02 சதவீதம் வாக்குகளும், 2-ம் கட்ட தேர்தலில் 80.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. 3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்துள்ளனர். வாக்கு பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
நகர்பகுதிகளில் 400, ஊரகப் பகுதிகளில் 420 என மொத்தம் 820 மையங்களில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளரின் ஏஜென்ட்கள் தவிர, மற்றவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. ஏஜென்ட்கள், தேர்தல் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் எல்லா மையங்களிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்யப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்டதால், எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரியவந்தது. முதலில் வார்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சென்னை உள்பட 10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களே முன்னணியில் இருந்து வருகின்றனர்.
வேலூரில் திமுக, அதிமுக இடையே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டது. 11.30 மணி நிலவரப்படி அதிமுக மேயர் வேட்பாளர் சுமார் 400 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளர்களும் பல நகராட்சி, பேரூராட்சிகளில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளனர். தாம்பரம், கிருஷ்ணகிரி, கடலூர், சாத்தூர், பத்மநாபபுரம் நகராட்சிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. திருவேற்காடு, ஆவடி, மதுராந்தகம், மேட்டூர், வேதாரண்யம், அரக்கோணம் நகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் முந்துகின்றனர்.
சென்னையில் மேயர் மற்றும் 200 கவுன்சிலர்களுக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 18 மையங்களில் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே அதிமுக மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி, அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 மையங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 18 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இரு மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் அதிக இடங்களை அதிமுக கைப்பற்றும் நிலை உள்ளது.
மாவட்ட பஞ்சாயத்து, ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கான தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதனால், ஊராட்சிகளில் ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகளை பதிவு செய்தனர். இதற்காக தனித்தனி கலரில் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டிருந்தன. ஊரகப் பகுதிகளில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், வாக்குப் பெட்டிகள், ஏஜென்ட்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன. அதில் இருந்த வாக்குச்சீட்டுகளை மொத்தமாக கொட்டி, கலர் வாரியாக பிரித்தனர். பின்னர் 50, 50 வாக்குச்சீட்டுகளை கட்டுகளாக கட்டினர்.
இந்தப் பணி முடிந்த பிறகே, இங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதனால், ஊரகப் பகுதிகளில் பல மணி நேரத்துக்கு பிறகே முடிவுகள் தெரியவரும். வாக்கு எண்ணிக்கை நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook