மாவோயிஸ்ட் பிரச்னை : மக்களை ஏமாற்றுகிறார் மம்தா!
கொல்கத்தா: மாவோயிஸ்ட் விவகாரத்தில் மேற்குவங்க மக்களை மம்தா பானர்ஜி ஏமாற்றுவதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி குழு அமைத்தார். போலீஸ் நடவடிக்கையை நிறுத்தினால் பேச்சுக்கு தயார் என்று மாவோயிஸ்ட்கள் அறிவித்தனர். ஆயுதங்களை கீழே போட வேண்டும் என அரசு தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டது.
கடந்த வாரம் கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா, ÔÔஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைய மாவோயிஸ்ட்களுக்கு 7 நாள் அவகாசம் தருகிறேன்ÕÕ என்று கெடு விதித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, சிறையில் இருக்கும் மாவோ தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் திரிணாமுல் தலைவர்கள் ஆபத்தை சந்திக்க நேரிடும் என மாவோயிஸ்ட்கள் எச்சரித்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிமன் போஸ் டெல்லியில் கூறியதாவது: தேர்தலுக்கு முன்பு மாவோயிஸ்ட்களுடன் நெருங்கி உறவாடிய மம்தா, தற்போது அவர்களிடம் இருந்து விலக முயற்சிக்கிறார். நெருங்கி உறவாடிய சமயத்தில் அவர்களுடன் பைக்கில் சென்றவர் தற்போது பாதுகாப்பு படை சூழ காரில் செல்கிறார். மாவோயிஸ்ட்களை தீவிரவாதிகள் என்று சொல்ல தொடங்கியிருக்கிறார். மாவோயிஸ்ட் விவகாரத்தில் மக்களை மம்தா ஏமாற்றி விட்டார். இவ்வாறு போஸ் கூறினார்.