சென்னை: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, 8 மணிக்கு பிறகு விறுவிறுப்பானது. தமிழகம் முழுக்க பல இடங்களில் மின்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. ஐகோர்ட் உத்தரவுப்படி சென்னையில் பெரும்பாலான பூத்களில் வீடியோ கேமரா இல்லை என எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 760 பதவிகளுக்காக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதல்கட்ட தேர்தலை சென்னை உள்பட 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்கள் சந்தித்தன. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். சென்னையைப் பொறுத்தவரை காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 9 மணி வரை மந்தமாக இருந்தது. ஒவ்வொருவராக வந்து வாக்களித்து விட்டு சென்றனர். சில இடங்களில் மட்டும் நீண்ட வரிசை காணப்பட்டது.
வேட்பாளர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் மட்டும் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர். 9 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு விறுவிறுப்பானது. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஆனால், ஊரகப் பகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் காலை 10 மணி வரை 23 சதவீத வாக்குகள் பதிவாகின. சென்னையில் 10 முதல் 12 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது. உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக நகர்ப்புற பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சில பூத்களில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து இயந்திரத்தை சரி செய்தனர்.
இதனால், அந்த பகுதிகளில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட்டது. முதல்கட்ட தேர்தல் நடக்கும் ஒன்றிய பகுதிகளில் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். அதற்காக 4 நிறங்களில் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டது. ஒரு வாக்காளர் 4 ஓட்டுகள் போட வேண்டி இருந்ததால், வாக்குப்பதிவுக்கு தாமதமானது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருந்தனர்.
புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் கிடைக்காதவர்களுக்கு, வாக்குச்சாவடி மையங்களில் பூத் சிலிப் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஆனால், அந்த பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு தாமதமாக வந்ததால் பூத் சிலிப் வாங்க முடியாமல் பலர் தவித்தனர். அனுபவம் இல்லாத பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததால், வாக்காளரின் பூத் சிலிப்பை கண்டுபிடித்து வழங்க சிரமப்பட்டனர். சென்னையில் 200 வார்டுகளுக்காக 4,876 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுவதையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். பதற்றமான பகுதிகளில் மத்திய போலீஸ் படையை நிறுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், 90 சதவீத பூத்களில் வெப்கேமரா இல்லை. வாக்குப்பதிவை வீடியோவிலும் பதிவு செய்யவில்லை என்று திமுக, காங்கிரஸ், பாமக மேயர் வேட்பாளர்கள் புகார் கூறினர். பாமக மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி கூறுகையில், ‘‘வைக்கப்பட்டிருந்த 10 சதவீத வீடியோ மற்றும் வெப் கேமராக்களும் சரியாக செயல்படவில்லை’’ என்றார். மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் 10 மணி வரை 23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. எந்த இடத்திலும் இதுவரை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. கோயம்பேடு, நெசப்பாக்கம் உள்ளிட்ட 12 இடங்களில் நேரடியாக ஆய்வு செய்தேன். வாக்களிக்க நின்ற வாக்காளர்களிடம் பேசினேன்.
கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலைபோல இல்லாமல் இப்போது சுதந்திரமாக வாக்களிக்க முடிந்ததாக அவர்கள் கூறினர். எல்லா பூத்களிலும் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. இதுதொடர்பாக கட்சிகள் கூறும் புகாரில் உண்மை இல்லை. அவர்கள் தோல்வி பயத்தில் அப்படி சொல்கின்றனர். ஒரு சில இடங்களில் மட்டும்தான் வெப் கேமரா மற்றும் வீடியோ கேமராவில் பிரச்னை ஏற்பட்டது. அதுவும் சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது’’ என்றார்.
2-ம் கட்ட பிரசாரம் இன்று ஓய்கிறது!
உள்ளாட்சி அமைப்புகளில் 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்டமாக 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 2ம் கட்ட தேர்தலை சந்திக்க உள்ள பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். மாலை 5 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. 2-ம் கட்ட தேர்தலில் நடக்கும் பகுதியில் 1.31 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook