வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் அதிமுகவுக்கு அமோக வெற்றி!
சென்னை: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். சென்னை மாநகராட்சியின் 118வது வார்டுக்கு உட்பட்ட சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை 9.45மணிக்கு வாக்களிக்க வந்தார். அவரை மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர் கலைராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.
வெளியே வந்த ஜெயலலிதா, நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய பெரும்பான்மையை அதிமுகவுக்கு தமிழக மக்கள் தந்தார்கள். மக்களுக்கு உறுதி அளித்தபடி, நல்ல நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்படுகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம். எனவே, உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் அமோக ஆதரவை வழங்கி, வெற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.