பல்லாவரம் பகுதி மக்களிடம் மாதம் ஒருமுறை குறை கேட்பேன்!
தாம்பரம்: பல்லாவரம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.எஸ்.செந்தில்குமார், நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் அவரை மக்கள் வரவேற்றனர். அப்போது அவர் கூறியதாவது: நகராட்சியில் உள்ள அனைத்து சுடுகாடுகளிலும் எரிவாயு தகனமேடை அமைக்கப்படும். குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். மினரல் வாட்டர் தரத்தில் மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கப்படும்.
அராஜகம் இல்லாமல் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் நடந்து கொள்வேன். நல்ல முறையில் பணியாற்றுவேன். மாதம் ஒரு முறை மக்கள் குறை கேட்பேன். என்னை தலைவராக தேர்ந்தெடுத்தால் நகராட்சி முழுவதும் வாரம்தோறும் கொசு மருந்து அடிப்பேன். சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தருவது, குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்றுவது, வர்த்தகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிப்பேன்.
முதன்மை நகராட்சியாக பல்லாவரத்தை மாற்ற முயற்சி எடுப்பேன். கட்சி பாகுபாடின்றி 42 வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் அனைத்து உதவிகளும் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன். இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.