மாணவியிடம் செயின் பறிப்பு : இன்ஜி. மாணவர் சிக்கினார்!
அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவியிடம் 3 சவரன் செயின் பறித்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். திருப்பூர் பாளையக்காடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதியின் மகள் சவுமியாத்ரி (19). பொன்னேரி அருகே கவரப்பேட்டையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கிறார். இவர் ஊரில் இருந்து பஸ்சில் புறப்பட்டு, இன்று காலை கோயம்பேடு பஸ் நிலையம் வந்து இறங்கினார். அப்போது ஒரு வாலிபர் பாய்ந்து சென்று அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்தார்.
உடனே மாணவி கூச்சல் போட்டார். அதற்குள் வாலிபர் தப்பி ஓடினார். அப்பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் துரத்தி பிடித்து, அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பெயர் அருண்ஜோதி (19), கடலூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்த ஜோதிலிங்கம் என்பவரின் மகன் என்று தெரிய வந்தது. இவர் பூந்தமல்லியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். அவரிடம் விசாரணை நடக்கிறது.