சென்னை மாநகராட்சியில் லஞ்சத்தை ஒழிப்பேன்!
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் கோ.வேல்முருகன், மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று மாலை வாக்கு சேகரித்தார். 139, 140, 170வது வார்டுகளுக்குஉட்பட்ட கோட்டூர்புரம், வேளச்சேரி, ஜோன்ஸ்ரோடு, ஜாபர்கான்பேட் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் மேளதாளங்கள் முழங்க வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்கள் கண்ணன், அகமத், ஏழுமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
பிரசாரத்தில் கோ.வேல்முருகன் பேசியதாவது: ஒவ்வொரு வார்டில் உள்ள குறைகளை உடனடியாக தீர்க்க குழு அமைக்கப்படும். எந்த பிரச்னையாக இருந்தா லும் 15 நாட்களுக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் வேலையை முடிக்க லஞ்சம் கேட்டால் அவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நேர்மையான முறையில் பணிகள் நடக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இதன் மூலம் லஞ்சம் இல்லாத மாநகராட்சியாக மாற்றுவேன். மெரினா கடற்கரையை உலகத் தரத்துக்கு இணையாக மாற்றுவேன்.
தனியார் கடற்கரை எவ்வளவு அழகாக உள்ளதோ, அதே வசதிகள் அனைத்தும் மெரினா கடற்கரையில் ஏற்படுத்தப்படும். கூவம் ஆற்றை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, அதில் படகு விடவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக மெரினா மாறும்.
இவ்வாறு கோ.வேல்முருகன் பேசினார்.