புளியந்தோப்பு உள்ளிட்ட பின்தங்கிய பகுதிக்கு முன்னுரிமை!
சென்னை: “என்னை வெற்றி பெற செய்தால், புளியந்தோப்பு உள்ளிட்ட பின்தங்கிய பகுதிக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று எஸ்டிபிஐ மேயர் வேட்பாளர் அமீர் ஹம்சா வாக்குறுதி அளித்தார். சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் (எஸ்டிபிஐ) சென்னை மேயர் வேட்பாளர் அமீர் ஹம்சா நேற்று எழும்பூர் தொகுதியில் கைக்கடிகாரம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு பகுதியில் அமீர் ஹம்சா பேசியதாவது:
சென்னையில் சில பகுதிகள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன. ஆனால், புளியந்தோப்பு போன்ற பகுதிகள் அரசியல்வாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. என்னை வெற்றி பெற செய்தால் புளியந்தோப்பு உள்ளிட்ட பின் தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன். மேலும், மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தருவேன்.
மழை காலத்தில் முக்கியமான சாலைகள் குளம் குட்டைகளாக மாறி விடுகின்ற நிலையை மாற்றி மழைநீர் தேங்காமல் வடிகால் அமைக்க பாடுபடுவேன். சாக்கடை ஓரமாக வசிக்கும் மக்களின் சுகாதாரம் பேணப்படும். இவ்வாறு அமீர் ஹம்சா பேசினார். ஜமாத்துல் உலமா மற்றும் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.