குப்பை இல்லா சென்னை உருவாக்குவேன்!
சென்னை: காங்கிரஸ் வெற்றி பெற்றால் குப்பை இல்லாத சென்னை உருவாக்கப்படும் என்று மேயர் வேட்பாளர் சைதை ரவி உறுதி அளித்தார்.
சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளர் காங்கிரசை சேர்ந்த சைதை ரவி நேற்று கோட்டூர்புரம் பகுதியில் வீதி வீதியாக பிரசாரம் செய்தார். இன்று காலை 9 மணி முதல் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்தார். வழிநெடுக மக்கள் அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர். பிரசாரத்தின் போது சைதை ரவி பேசியதாவது:
‘சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை என்பதே காங்கிரஸ் வாக்குறுதி. தற்போது நகரின் அனைத்து பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதற்கு காரணம் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனங்கள் சரியாக செய்யாததுதான். மாநகராட்சி ஊழியர்கள் வேலை செய்யும் பகுதிகள் சுத்தமாக உள்ளன. ஆனால் தனியார் சார்பில் சுத்தம் செய்யும் தெருக்கள் குப்பை மேடாக காட்சி அளிக்கின்றன.
காங்கிரஸ் மேயராக என்னை தேர்ந்தெடுத்தால், சென்னையில் குப்பை பிரச்னை ஒழிக்க முன்னுரிமை அளிக்கப்படும். ஊழியர்கள் இரவிலே குப்பை அள்ளும் பணியை முடித்து விடுவார்கள். இவ்வாறு சைதை ரவி பேசினார். இன்று மாலை 4.30 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் காங்கிரஸ் மேயர் வேட்பாளர் சைதை ரவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.