தீபாவளிக்கு இன்னும் 19 நாட்கள் : சிவகாசியில் பட்டாசு விற்பனை விறுவிறு!
சிவகாசி: தீபாவளிக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை களை கட்டியுள் ளது. சரவெடிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளி மாவட்ட மொத்த வியாபாரிகள் சரவெடிகள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வெளி மாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பட்டாசு வாங்க சிவகாசியில் குவிந்துள்ளனர். இதற்காக சிவகாசியில் ஏராளமான பிரத்யேக பட்டாசு கடைகள் விற்பனையை தொடங்கி உள்ளன. பட்டாசு விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் பட்டாசு தொழிலாளர்கள் சிலர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பட்டாசு தயாரிக் கும் பணியில் பெரும் தேக்கநிலை உள்ளது.
குறிப்பாக சரவெடி தயாரிக்கும் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைக்காத நிலையில் சரவெடி தயாரிக்கும் பணிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரசாரத்துக்கு செல்லும் வேட்பாளர்களை சரவெடி வெடித்து வரவேற்பதையே தொண்டர்கள் விரும்புகின்றனர். இதற்காக சரவெடிகள் அதிகளவில் தேவைப்படுகிறது. ஊர்வலங்களுக்குத் தேவையான 1000 வாலா, 2000 வாலா மற்றும் 5000 வாலா சரவெடிகள் தற்போது சிவகாசியில் கிடைக்கவில்லை. இந்தாண்டு தேர்தலும், தீபாவளியும் அடுத்தடுத்து வருவதால் சரவெடிகள் தேவை அவசியமாகிறது.
இதனால் ஆர்டர்கள் அதிகளவில் குவிகின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஆர்டர்களை ஏற்க முடியாமல் பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் திணறுகின்றன. இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பட்டாசு வியாபாரி அண்ணாத்துரை கூறுகையில், “வழக்கமாக ஆயுத பூஜையன்று பட்டாசு வியாபாரத்தை தொடங்குவோம். தீபாவளி கொண்டாட்டத்துக்கு மக்கள் அதிகம் விரும்புவது சரவெடிகளைத்தான். இந்தாண்டு சரவெடிகளுக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால் சரவெடி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றோம்” என்றார்.